7.98 திருநன்னிலத்துப் பெருங்கோயில்
பஞ்சமம்
1தண் இயல் வெம்மையினான்; தலையில் கடைதோறும் பலி,
பண் இயல் மென்மொழியார், இடக் கொண்டு உழல் பண்டரங்கன்
புண்ணிய நால்மறையோர் முறையால் அடி போற்று இசைப்ப
நண்ணிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
2வலம் கிளர் மாதவம் செய் மலை மங்கை ஓர் பங்கினனாய்,
சலம் கிளர் கங்கை தங்கச் சடை ஒன்று இடையே தரித்தான்
பலம் கிளர் பைம்பொழில்-தண்பனி வெண்மதியைத் தடவ,
நலம் கிளர்-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
3கச்சியன்; இன் கருப்பூர் விருப்பன்; கருதிக் கசிவார்
உச்சியன்; பிச்சை உண்ணி(ய்); உலகங்கள் எல்லாம் உடையான்
நொச்சி அம் பச்சிலையால், நுரைநீர்-புனலால்,-தொழுவார்
நச்சிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
4பாடிய நால்மறையான்; படு பல் பிணக்காடு அரங்கா
ஆடிய மா நடத்தான்”அடி போற்றி!” என்று அன்பினராய்ச்
சூடிய செங்கையினார் பலதோத்திரம் வாய்த்த சொல்லி
நாடிய-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
5பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய
சலந்தரன் ஆகும் இருபிளவு ஆக்கிய, சக்கரம் முன்
நிலம் தரு மாமகள்கோன் நெடுமாற்கு அருள்செய்த பிரான்
நலம் தரு நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே,
உரை
   
6வெண்பொடி மேனியினான்; கருநீலமணி மிடற்றான்,
பெண் படி செஞ்சடையான், பிரமன் சிரம் பீடு அழித்தான்
பண்பு உடை நல்மறையோர் பயின்று ஏத்தி, பல்கால் வணங்கும்
நண்பு உடை-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
7தொடை மலி கொன்றை துன்றும் சடையன், சுடர் வெண்மழுவாள்
படை மலி கையன், மெய்யில் பகட்டு ஈர் உரிப்போர்வையினான்
மடை மலி வண்கமலம் மலர்மேல் மட அன்னம் மன்னி
நடை மலி-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
8குளிர்தரு திங்கள், கங்கை, குரவோடு, அர, கூவிளமும்,
மிளிர்தரு புன்சடைமேல் உடையான், விடையான் விரை சேர்
தளிர் தரு கோங்கு, வேங்கை, தட மாதவி, சண்பகமும்,
நளிர்தரு-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
9கமர் பயில் வெஞ்சுரத்துக் கடுங் கேழல் பின் கானவனாய்,
அமர் பயில்வு எய்தி, அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான்
தமர் பயில் தண் விழவில்-தகு சைவர், தவத்தின் மிக்க
நமர், பயில்-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
10கருவரை போல் அரக்கன் கயிலை(ம்) மலைக்கீழ்க் கதற,
ஒருவிரலால் அடர்த்து, இன் அருள் செய்த உமாபதிதான்
திரை பொரு பொன்னி நன்நீர்த் துறைவன், திகழ் செம்பியர்கோன்,
நரபதி,-நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.
உரை
   
11கோடு உயர் வெங்களிற்றுத் திகழ் கோச்செங்கணான் செய் கோயில்,
நாடிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனைச்
சேடு இயல் சிங்கிதந்தை-சடையன், திரு ஆரூரன்
பாடிய பத்தும் வல்லார் புகுவார், பரலோகத்துளே.
உரை