தொடக்கம் |
குழைத்த பத்து
|
|
|
குழைத்தால், பண்டைக் கொடு வினை, நோய், காவாய்; உடையாய்! கொடு வினையேன் உழைத்தால், உறுதி உண்டோ தான்? உமையாள் கணவா! எனை ஆள்வாய்; பிழைத்தால், பொறுக்க வேண்டாவோ? `பிறை சேர் சடையாய்! முறையோ?' என்று அழைத்தால், அருளாது ஒழிவதே, அம்மானே, உன் அடியேற்கே? |
|
உரை
|
|
|
|
|
அடியேன் அல்லல் எல்லாம், முன், அகல ஆண்டாய், என்று இருந்தேன்; கொடி ஏர் இடையாள் கூறா, எம் கோவே, `ஆ! ஆ!' என்று அருளி, செடி சேர் உடலைச் சிதையாதது எத்துக்கு? எங்கள் சிவலோகா! உடையாய்! கூவிப் பணி கொள்ளாது, ஒறுத்தால், ஒன்றும் போதுமே? |
|
உரை
|
|
|
|
|
ஒன்றும் போதா நாயேனை உய்யக் கொண்ட நின் கருணை, இன்றே, இன்றிப் போய்த்தோ தான்? ஏழை பங்கா! எம் கோவே! குன்றே அனைய குற்றங்கள் குணம் ஆம் என்றே, நீ கொண்டால், என் தான் கெட்டது? இரங்கிடாய்; எண் தோள், முக் கண், எம்மானே! |
|
உரை
|
|
|
|
|
மான் நேர் நோக்கி மணவாளா! மன்னே! நின் சீர் மறப்பித்து, இவ் ஊனே புக, என் தனை நூக்கி, உழலப் பண்ணுவித்திட்டாய்; ஆனால், அடியேன் அறியாமை அறிந்து, நீயே அருள் செய்து, கோனே! கூவிக்கொள்ளும் நாள் என்று? என்று, உன்னைக் கூறுவதே? |
|
உரை
|
|
|
|
|
கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ! தேறும் வகை நீ! திகைப்பு நீ! தீமை, நன்மை, முழுதும் நீ! வேறு ஓர் பரிசு, இங்கு, ஒன்று இல்லை; மெய்ம்மை, உன்னை விரித்து உரைக்கின், தேறும் வகை என்? சிவலோகா! திகைத்தால், தேற்ற வேண்டாவோ? |
|
உரை
|
|
|
|
|
வேண்டத் தக்கது அறிவோய் நீ! வேண்ட, முழுதும் தருவோய் நீ! வேண்டும் அயன், மாற்கு, அரியோய் நீ! வேண்டி, என்னைப் பணி கொண்டாய்; வேண்டி, நீ யாது அருள் செய்தாய், யானும், அதுவே வேண்டின் அல்லால், வேண்டும் பரிசு ஒன்று உண்டு என்னில், அதுவும், உன் தன் விருப்பு அன்றே? |
|
உரை
|
|
|
|
|
அன்றே, என் தன் ஆவியும், உடலும், உடைமை எல்லாமும், குன்றே அனையாய்! என்னை ஆட்கொண்ட போதே கொண்டிலையோ? இன்று, ஓர் இடையூறு எனக்கு உண்டோ? எண் தோள், முக் கண், எம்மானே! நன்றே செய்வாய்; பிழை செய்வாய்; நானோ இதற்கு நாயகமே? |
|
உரை
|
|
|
|
|
நாயின் கடை ஆம் நாயேனை நயந்து, நீயே ஆட்கொண்டாய்; மாயப் பிறவி உன் வசமே வைத்திட்டு இருக்கும் அது அன்றி, ஆயக் கடவேன், நானோ தான்? என்னதோ, இங்கு, அதிகாரம்? காயத்து இடுவாய்; உன்னுடைய கழல் கீழ் வைப்பாய்; கண் நுதலே! |
|
உரை
|
|
|
|
|
கண் ஆர் நுதலோய்! கழல் இணைகள் கண்டேன், கண்கள் களி கூர; எண்ணாது, இரவும் பகலும், நான், அவையே எண்ணும்இது அல்லால் மண்மேல் யாக்கை விடும் ஆறும், வந்து, உன் கழற்கே புகும் ஆறும் அண்ணா! எண்ணக் கடவேனோ? அடிமை சால அழகு உடைத்தே! |
|
உரை
|
|
|
|
|
அழகே புரிந்திட்டு, அடி நாயேன் அரற்றுகின்றேன்; உடையானே! திகழா நின்ற திருமேனி காட்டி, என்னைப் பணிகொண்டாய்; புகழே பெரிய பதம் எனக்கு, புராண! நீ, தந்தருளாதே, குழகா, கோல மறையோனே, கோனே, என்னைக் குழைத்தாயே! |
|
உரை
|
|
|
|