120, அம்பரன்-ஆகாயமாய் இருப்பவன். அனலன்-நெருப்பாய் இருப்பவன். அனிலம் முதலியன இங்ஙனம் அன்பெற்று வாராமையின், அவை ஆகுபெயர்களாம். அனிலம்-காற்று ஏனையபோல; ‘புவியே’ என்பதே பாடமாதல் வேண்டும். புவி-நிலம். அம்பு-நீர். இந்து-சந்திரன். ‘இரவீ’ என்பதே பாடம்போலும். இறைவனது அட்ட மூர்த்தங்களுள் இயமானன் ஒழித்து ஒழிந்த உருவங்களை எடுத்தோதி விளித்தார். ‘‘அணுவாய்’’ என்றது, ‘நுண்ணிய பொருளாய்’ என்றவாறு. மொய்ம்பு - வலிமை ; இங்கு, மன உறுதியை யுணர்த்திற்று. நலம் சொல் - உறுதியை உரைக்கின்ற. ‘‘மூதறிவாளர் முகத்தலை’’ என்றதில் தொக்குநின்ற ஆறாவது, ’யானையது காடு’ என்பதுபோல. வாழ்ச்சிக் கிழமைக்கண் வந்தது. ‘‘எம்பிரான்’’ என்றது, ‘இறைவன்’ என்னும் அளவாய் நின்றது. ‘‘மீண்டு’’ என்றது, ‘மற்றும்’ என்னும் பொருள் பட வந்தது. |