பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

12. திரைலோக்கிய சுந்தரம்

124. 
  

அம்பளிங்கு பகலோன்பால் அடைபற்றாய் இவள்
                                     [மனத்தின்
முன்பளிந்த காதலும்நின் முகந்தோன்ற விளங்கிற்றால் ;
வம்பளிந்த கனியே ! என் மருந்தே ! நல் வளர்முக்கட்
செம்பளிங்கே ! பொழிற்கோடைத் திரைலோக்கிய
                                  [சுந்தரனே.  (3)
 

124.   இது முதலாக வரும் திருப்பாடல்கள் செவிலி கூற்றாம். அம்
பளிங்கு   பகலோன்பால்   அடை   பற்றாய்-அழகிய   பளிங்குக்கல்
கதிரவனிடம்  அடைந்த  நிலையைப்போல  ;  அஃதாவது, ‘பளிங்குக்
கல்லினது   இயற்கை   யொளியும்,  அடுத்தது  காட்டுந்  தன்மையும்
கதிரவன்   தோன்றியபொழுது   அவன்  முன்பே  விளங்குதல்போல’
என்றதாம்.   இவள்   மனத்தில்   முன்பு   அளிந்த  காதலும்  நின்
முகந்தோன்ற  விளங்கிற்று-இவள் உள்ளத்தில் இயற்கையாகவே முன்பு
மிகுந்திருந்த   விருப்பம்   (உன்னையே   மிக  விரும்பும்  இவளது
இயற்கை)  உன்னுடைய  முகம்  தோன்றிய காலத்தில் அதன் முன்பே
வெளிப்பட்டது.  இறைவனை அடைதலே உயிர்கட்கு இயற்கையாதலும்,
அவ்வியற்கை  ஆணவத்தின்  செயலால்  திரிக்கப்படுதலாலே  அவை
உலகை    நோக்கிச்    செல்லும்   செயற்கையை   உடையவாதலும்,
ஆணவத்தின்    சத்தி   மெலிந்தொழிந்தபொழுது       உயிர்களின் 
இயற்கைத்   தன்மை     வெளிப்படுதலும்    ஆகிய   உண்மைகள்
இங்குக்    குறிக்கப்பட்டன என்க. வம்பு அளிந்த-புதிதாய்ப்   பழுத்த;
ஆணவ நீக்கத்தில் விளங்குதலால் இறையின்பம் புதிதாய்த்  தோன்றல்
பற்றி  இவ்வாறு  கூறப்பட்டது. மருந்தாதல், ‘பிறவிப் பிணிக்கு’  என்க.
‘நல் பளிங்கு’ என இயையும். வளர்-ஒளி மிக்க. மூன்று  கண்களையும்,
செம்மையையும்  உடைய  பளிங்கு,  சிவபெருமானுக்கு   இல்பொருள்
உவமையாய் வந்தது. பின்னிரண்டடிகளை முதலில் வைத்து,  இறுதியில்
‘இவட்கு அருள வேண்டும்’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க.  


மேல்