129. ‘‘நளிர் புரிசை’’ என்பது முதலாகத் தொடங்கி, ‘‘அரும்பேதைக்கு அருள்புரியாதொழிந்தாய்’’ என்றதனை இறுதிக்கண் வைத்து, ‘இஃது உனக்கு அழகோ’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. ‘‘பேதை’’ என்பது, ‘பெண்’ என்னும் அளவாய் நின்றது. ‘இவ்வரும்பேதை’ எனச் சுட்டு வருவித்துரைக்க. அருமை, பெறுதற்கருமை. ‘‘நரம்பு’’ என்றது, அதனினின்று எழும் இசையை. சிவபெருமான் வீணை வாசித்தலை, ‘‘வேயுறு தோளிபங்கன், விடமுண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி’’ (திருமுறை-2.85.1) என்பதனானும் அறிக. உயிரை ஈர்தலாவது உடம்பினின்றும் பிரித்தல். ‘‘உயிர் ஈரும்வாளது’ (குறள்-334) என்புழியும், ஈர்தல் இப்பொருட்டாதல் அறிந்துகொள்க. நளிர்-குளிர்ச்சி ; இஃது அகழி நீரால் ஆவது. வனம்-நந்தவனம். புரிசை வனம்-புரிசையாற் சூழப்பட்ட வனம். ‘பாதிரியம் போது’ என்பது, தொகுத்தல் பெற்று, ‘பாதிரம் போது’ என நின்றது. |