157. ‘அனல்’ என்பது ஈற்றில் அம்முப் பெற்று நின்றது. அனிலம்-காற்று ஏனையவற்றோடொப்ப, ‘‘புவனி’’ என்பதிலும் விளியுருபாகிய ஏகாரம் விரிக்க. புவனி-பூமி. அம்பரா-ஆகாயமாய் உள்ளவனே ; இங்கு இவ்வாறு உயர்திணையாக விளித்தமையால், ‘‘அனலம்’’ முதலியவற்றையும் ஆகுபெயராகக் கொள்க. அம்பரத்து அளிக்கும் கனகமே-(நல்வினை செய்தோர்க்கு) விண்ணில் கொடுக்கப்படுகின்ற பொன்னுலகமே. வெள்ளிக் குன்றமே-சிவனடியார்கட்கு அளிக்கப்படுகின்ற கைலை மலையே. களைகண்-துணை. சைவன்-சிவம்(மங்கலம்) உடையவன். ‘சைவன்’ என்றது சிவபெருமானைக் குறிக்குமிடத்து, ‘சிவம்’ என்னும் சொல் பண்பினை உணர்த்தி நிற்கும். அவன் அடியார்களைக் குறிக்குமிடத்து அச்சொல் அப்பண்பினையுடைய முதற் பொருளைக் குறித்துநிற்கும். |