பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

17. திருவிடைமருதூர்

176.

அணியுமிழ் சோதி மணியினுள் கலந்தாங்
   கடியனே னுள்கலந் தடியேன்
பணிமகிழ்ந் தருளும் அரிவைபா கத்தன்
   படர்சடை விடமிடற் றடிகள்
துணியுமி ழாடை அரையில்ஓர் ஆடை
   சுடர்உமிழ் தரஅத னருகே
மணியுமிழ் நாக மணியுமிழ்ந் திமைப்ப
   மருவிடந் திருவிடை மருதே.                   (4)
 

176.     அணி உமிழ் சோதி மணியின் உள்   கலந்தாங்கு-அழகை
வெளிப்படுத்துகின்ற  ஒளி  இரத்தினத்தின்   உள்ளே  கலந்தாற்போல.
இவ்வுவமை,    ‘இறைவன்    அடியாரது     உள்ளத்தில்   கலந்தான்
என்பதெல்லாம், மணியினுள் ஒளி கலந்தது  போல்வதுதான்; அஃதாவது
இயற்கையாயுள்ள  கலப்பேயன்றிச்  செயற்கையாய்   வரும் கலப்பன்று’
என்பதை   விளக்கிநின்றது.   ‘அடிகள்  மருவிடம்’   என  இயையும்.
‘படர்ந்த   சடையையும்,   விடத்தையுடைய    மிடற்றையும்  உடைய
அடிகள்’  என்க.  ‘அரையில்  ஓர் ஆடை துணி  உமிழ் ஆடையோடு
சுடர்   உமிழ்தர’என்க.   துணி   உமிழ்-குறைதலை   வெளிப்படுத்தி
நிற்கின்ற. ‘ஆடை’ என்பது ‘ஆடுதல் உடையது’ என்னும் பொருட்டாய்
உத்தரீயத்திற்கே     பெயராயினும்,     பொதுமையில்     அரையில்
உடுக்கப்படுவதாகிய   உடையையும்  குறித்தல்  பற்றி   உத்தரீயத்தை,
‘‘துணியுமிழ்  ஆடை’’  என்றார். உத்தரீயம் உடையிற்  குறைதல் பற்றி,
‘துண்டு’  எனவும்  வழங்கப்படுதல் அறிக. நாகம், கச்சாக  அமைந்தது.
‘அணி உமிழ்ந்து’ எனப் பிரிக்க.  


மேல்