256. ‘‘ஏத்துகின்ற’’ என்றது, ‘காதலித்துத் துதிக்கின்ற, என்னும் பொருட்டு. ‘இளையாள் மொழியாகிய (கூற்றாகிய) இனிய தமிழால்’என உரைக்க. ‘‘மறைவல’’ என்றது பொருளுணர்தல் வன்மையையும், ‘‘நாவலர்கள்’ என்றது, ஒலி பிறழாது ஓதுதல் வன்மையையும் குறித்து நின்றன. அறை-வரம்பால் வரையறுக்கப்பட்ட வயல்கள். ‘வயல்கள் செந்நெற்பயிர்களோடும், கரும்பின் ஆலைகளோடும் சூழும் மயிலை’ என்க. அணி-வரிசை. மயிலை-மயிலாடு துறை (மாயூரம்). |