12. ‘நெடுமாடத்து’ என்பதனை முதலிற் கூட்டுக. மிடை- நெருங்கிய. படலம்-கூட்டம். தூமம்-புகை. பியர். ‘பியல்’ என்பதன் போலி. ‘பிடர்’ என்பது பொருள். இதனைக் கொடிப்படலத்திற்கும் கூட்டுக, ‘‘பியர்’’ என்பதை, ‘பெயர்’ எனவும் பாடம் ஓதுவர். ஓங்கியுள்ள மேல்மாடங்களில் உயர்த்தப்பட்டுள்ள கொடிச் சீலைகளின் கூட்டத்தின்மேல் ஓமத்தின் புகையும், அவ்வோமப் புகைப்படலத்தின்மேல் அகிற்புகைப் படலமும் நிறைந்திருக்கின்ற பெரும்பற்றப்புலியூர்’ என்றவாறு. சியர் ஒளி-விளக்கத்தை யுடைய ஒளி. மயர்-மயக்கம். ‘மயர்வு’ என்பதும் பாடம். சேவடிகளையே கூறினாராயினும், திருவுருவம் முழுவதையும் கூறுதல் கருத்தென்க. |