பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

16. தஞ்சை இராசராசேச்சரம்

166.

எவருமா மறைகள் எவையும்வா னவர்கள்
   ஈட்டமும் தாட்டிருக் கமலத்
தவருமா லவனும் அறிவரும் பெருமை
   அடல்அழல் உமிழ்தழல் பிழம்பர்
உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
   உறுகளிற் றரசின தீட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (5)

 

166.   ‘‘எவரும்’’ என்றதற்கு, ‘மக்கள் யாவரும்’ என உரைக்க. தாள்
திருக்  கமலம்-தண்டினையுடைய    அழகிய தாமரை மலர். அதன்கண்
இருப்பவர்,  பிரமதேவர்.    பிரமனைப் பன்மையாற் கூறியது முடிதேடி
வந்த    பொழுது,      ‘அறிந்து      வந்தேன்’       எனப்பொய் 
கூறிய          இழிவை         உட்கொண்டு.        அறிவரு -
அளவறியப்படாத.     அளவறியப்படாமையை    வெளிப்படுத்தினோர்
அயனும்,     மாலுமாயினும்    அறியமாட்டாமை     அனைவர்க்கும்
பொதுவாதல்    பற்றி,    அவ்விருவரோடு,    ஏனைய    பலரையும்
உளப்படுத்துக்  கூறினார். பெருமை,  அடி பாதலத்தைக் கடந்தும், முடி
அண்டங்கள்       எல்லாவற்றையும்        கடந்தும்     நின்றமை.
‘பெருமையையுடைய  தழல்’  என்க.   அடல்-அடுதல்  ;  வருத்துதல்.
‘வருத்துதலையுடைய   அழல்’     என்க.  அழல்-வெப்பம்,  பிழம்பர்,
‘பிழம்பு’        என்பதன்         போலி.         பிழம்பு-வடிவம்.
உவரி-உவர்ப்புடையதாகிய.   ‘‘அரசு’’ என்றது பன்மை குறித்து நின்றது.
‘மா மறுகில் உறு களிற்றினது  ஈட்டம் மாகடலின் ஒலிசெய்’ என மாற்றி
அதனையும்.  ‘‘இஞ்சி  சூழ்’’   என்பதனையும், ‘தஞ்சை’ என்பதனோடு
தனித்தனி  முடிக்க.   இவரும்-உயர்ந்த.  ‘‘மால்வரை  செய்’’ என்றதில்
உள்ள செய், உவம உருபு. ‘இவர்க்குப் பிழம்பர் தழல்’ என முடிக்க.


மேல்