பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

17. திருவிடைமருதூர்

178.

எரிதரு கரிகாட் டிடுபிண நிணமுண்
   டேப்பமிட் டிலங்கெயிற் றழல்வாய்த்
துருகழல் நெடும்பேய்க் கணமெழுந் தாடுந்
   தூங்கிருள் நடுநல்யா மத்தே 
அருள்புரி முறுவல் முகிழ்நிலா எறிப்ப
   அந்திபோன் றொளிர்திரு மேனி
வரியர வாட ஆடும்எம் பெருமான்
   மருவிடந் திருவிடை மருதே.                   (6)
 

178.  எரி  தரு -  நெருப்பைத்   தருகின்ற;  என்றது, ‘நெருப்பை 
யுடைய’      என்றபடி.      கரிகாடு   -    சுடுகாடு.     இடுபிண
நிணம்   - ஒரு பக்கத்தில்  இடப்பட்ட  பிணத்தினது  நிணத்தை. துரு
கழல்-பிணத்தைத்  தேடி  ஓடுகின்ற  கால்.  ‘யாமத்தே  ஆடும்’  என
இயையும்.  அருள்புரி  முறுவல்  - அருள் வழங்குதலைக்  குறிக்கின்ற
நகைப்பு.   புன்னகையாதலின்,   ‘‘முகிழ்நிலா’’  என்றார்.  முகிழ்த்தல்
-அரும்புதல்.   ‘புன்முறுவலாகிய   இள  நிலாவோடு   தோன்றுதலின்
செம்மேனி   அந்திபோன்றொளிரும்’  என்க.  ‘திருமேனிக்கண்’  என
உருபு விரிக்க. வரி-கீற்று. 


மேல்