24. காடு ஆடு பல்கணம்-காட்டில் உடன் ஆடுகின்ற பல பூதக் கூட்டங்கள். கேழற் கடும் பின்-பன்றியினது கடிதாகிய பின்னிடத்தில். கேழல் கடிதாக ஓடுதலின், அதன் பின்னிடமும் கடிதாயிற்று. ‘கடுவிருள் நெடும்பகல்’ என்பதும் பாடம். கான்-காடு. விம்முதலும் வெருவுதலும் பித்தினால் வருவன. சேடன்- பெருமையுடையவன். ‘செல்வராகிய செழுஞ்சோதி அந்தணர்கள்’ என்க. சோதி, இங்கு வேள்வித் தீ, அதனை நன்கு ஓம்புதலின், ‘‘ செழுஞ்சோதி’’ என்றார் அந்தணர்களை, ‘‘செல்வர்’’ என்றவர், ‘அவர்க்குச் செல்வமாயது இது’ என்றற்கு, ‘செழுஞ்சோதி’ என்றார். ‘செங்கையால்’ என உருபு விரிக்க கோடு. ‘கோடுதல்’ என, முதனிலைத் தொழிற்பெயர் : ‘குனிப்பு; நடனம்’ என்பது பொருள். |