பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்

111. 

கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தனை ஆரணம் பிதற்றும்
பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை
   பெரியவர்க் ககலிரு விசும்பின்
முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல்
   முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே.             (11)

திருச்சிற்றம்பலம்
 


111. கித்தி-விளையாட்டு.‘அரிவையர் கம்பலை செய்’ என இயையும்.
மத்தன்-உன்மத்தன்   ;  ‘ஊமத்த  மலரைச்  சூடியவன்   எனலுமாம்.
பெரியவர்க்கு-பக்குவம்  மிக்கோர்க்கு.  ‘‘அகல் இரு விசும்பு’’ என்றது
சிவலோகத்தை,   ‘விசும்பின்   கண்ணதாகிய  முத்தி’  என்க. முத்தி
தருவதனை, ‘‘முத்தி’’  என்றார். ‘திருவும்’ என்னும் இறந்தது  தழுவிய
எச்ச  உம்மை  தொகுத்தலாயிற்று  திரு-திருமகள்.  அவள்,  துறக்கம்
முதலிய   செல்வத்தைத்   தருபவள்.  எனவே,  ‘இம்மை   மறுமைப்
பயன்களையும் பெறுவர்’ என்றதாம்.


மேல்