71. கோ வினை - தலைமைச் செயல்களையுடைய. பவளக்குழ - பவளம்போலும் நிறத்தையுடைய குழவியாகிய இவை இரண்டும், ‘‘கோழி வெல்கொடியோன்’’ என்பதனோடே முடியும். மணக்கோலக் குழாங்கள்,தேவருலக மகளிர் குழாங்கள்,இவர்கள் முருகனால் மாலை சூட்டப்படுதலை விரும்பி அவனைச் சூழ்ந்து நிற்பர் என்க.‘‘ஒரு கை வான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட’’ (117) என்ற திருமுருகாற்றுப் படையைக் காண்க. காவன் - கற்பகச் சோலையை யுடைய இந்திரன். ‘அவனைச் சூழ்ந்தவரையும் சேனையாகக் கொண்டு காப்பவன்’ என்க. இனி,‘அமரரை’ என ஒருசொல் வருவித்து,‘காவல் நற்சேனையென்னக் காப்பவன்’ என உரைப்பினும் ஆம். இனி,வேறு உரைப்பாரும் உளர். ‘கவர்வானே’ என்றது, ‘கவர்தல் பொருந்துவதோ’ என்றவாறு. ‘அமரர்களை வருந்தாமற் காப்பவன்,என் மகளை வருந்தச் செய்தல் பொருந்துமோ’ என்றதாம். ‘‘தே’’ என்பது அஃறிணைச் சொல்லாய்ப் பன்மை குறித்து நின்றது. தே - தெய்வம். தூவி - சிறகு. பீலி - தோகை. ‘சுப்பிரமண்ணியன்’ என்றதில் ணகரமெய் விரித்தல். |