பாட்டு முதற்குறிப்பு அகராதி

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

15. திருச்சாட்டியக்குடி

160.

சித்தனே, அருளாய் ; செங்கணா, அருளாய் ;
   சிவபுர நகருள்வீற் றிருந்த
அத்தனே, அருளாய் ; அமரனே, அருளாய் ;
   அமரர்கள் அதிபனே, அருளாய் ;
தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல்
   சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை
முத்தனே, அருளாய் ; முதல்வனே அருளாய் ;
   முன்னவா, துயர்கெடுத் தெனக்கே.               (9)
 

160.     சித்தன்-எல்லாம்    வல்லவன்.    செங்கணன்-நெருப்புக்
கண்ணையுடையவன்.    அமரன்-தெய்வ     வடிவினன்.   அமரர்கள்
அதிபன்-தேவர்கள்   தலைவன்.  படுகர்-குளம்.    தண்டலை-சோலை.
‘படுகரையும்  தண்டலையையும் உடைய சூழலையுடைய   சாட்டியக்குடி
என்க.  ‘‘முன்னவா’’  என்றதனை  முதலிலும் ‘‘துயர்கெடுத்து எனக்கு’’
என்றதனை,   ‘‘சித்தனே’’  என்றதன்  பின்னும்   கூட்டுக.  இங்ஙனம்
கூட்டவே,  இஃது  ஏனைப்  பெயர்களின்  பின்னும்   வந்து இயைதல்
அறிக.   ‘‘துயர்கெடுத்து   எனக்கு  அருளாய்’’  எனப்   பலமுறையும்
கூறியது, முறையீடு தோன்ற.


மேல்