204. சீரால் மல்கு-புகழால் உலகெங்கும் நிறைந்த, ‘‘தஞ்சையர் கோன்’’ என்றதனால், இவர் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டிருந்தமை பெறப்படும். ‘‘கோழிவேந்தன்’’ என்றது மரபு குறித்ததாய், ‘சோழ மன்னன்’ என்னும் அளவாய் நின்றது. ‘கோழி வேந்தன், தஞ்சையர் கோன் கண்டராதித்தன் அம்பலத்தாடி தன்னைக் கலந்த அருந்தமிழ் மாலை’ என்க. ஆரா இன்சொல் - தெவிட்டாத இனிமையையுடைய சொல்லையுடைய. பேரா உலகு- சென்றடைந்தோர் நீங்காது நிலைபெறும் உலகம்; வீட்டுலகம். |