108. ‘தன்னகத்துள்ள சிலம்பு முதலாக மான் ஈறாயினவற்றை என் மனத்து வைத்தான்’ என்க. அகம், ஏழன் உருபு. மழலைச் சிலம்பு-மெல்லிய ஓசையையுடைய சிலம்பு. இன்னகையும் இறைவனுடையதே ; இதனைக் கங்கைக்கு ஆக்குவாரும் உளர். மழலைக் கங்கை-இனிய ஓசையையுடைய கங்கை. கொங்கு இதழி-தேனை யுடைய கொன்றை மாலை. ‘கோங்கிதழி’ என்பது பாடம் அன்று. வளர் இள மான்-வளர்தற்குரிய இளைய மான் ; ‘மான் கன்று’ என்றபடி. கின்னரம், ஓர் நரம்புக் கருவி, முழவம்-மத்தளம். |