16. ‘நிறைந்த, தழைத்த வாழை’ என்க. ‘வாழை, தெங்கு, கமுகு, பலா, மா என்பவற்றின்மேல் பிறை தவழ் பொழில்’ என்றவாறு. இவற்றோடு இயைபில்லாத துகிற் கொடியை இடை வைத்தார்; பிறை தவழப்பெறுதலாகிய ஒப்புமை பற்றி. எனவே, அதனை முதலிற் கூட்டி, ‘நிழற்கொடியோடு ’ என வேறுவைத்துரைக்க. ‘பலா’ என்பது ஈறு குறுகிநின்றது: செய்யுளாதலின் உகரம்பெறாது வந்தது. கிடங்கினை (ச் சூழ) உடைய இடை மதில்’ என்க. பதணம் - மதில். உறுப்பு. ‘தரளம், நித்திலம்’ என்பன முத்தின் வகைகள். ‘அவற்றை உடைய செம்பொன்னால் இயன்ற சிற்றம்பலம்’ என்றவாறு. இத்திருப்பாட்டினின்றும் சிலர். ‘கூத்த’ என்றே பாடம் ஓதுவர். நிதம்பம்-அறை. பொறை அணி-உடைக்குக் காப்பாக அணியப்பட்ட கச்சு நூல்’ என்க. ‘பொறையாக’ என ஆக்கம் வருவிக்க. புகல்-விருப்பம். |