245. உடையின்மையால் மரம்போல் நிற்றலின், ‘‘நெடிய’’ என்றார்; இஃது இடக்கரடக்கு. பின்னர், ‘சாக்கியர்’ என்றலின், ‘‘சமண்’’ என்றதனையும் ‘சமணர்’ என்பது ஈறு தொகுக்கப்பட்டதாக உரைக்க. மறை-உடலை மூடுகின்ற. ‘சமணரும், சாக்கியரும் ஆகிய அவத்தோர்’ என்க. நிரம்பா-உணர்வு நிரம்பப் பெறாத, செடி உந்து-பாவத்தால் செலுத்தப்படுகின்ற. அவத்தோர்-வீண் செயல் உடையவர். அடிகள்-தலைவர். ‘‘அவரை’’ என்றது, ‘தம்மை’ என்றபடி. ‘அடிகளாகிய தம்மை’ என்க. ஆரூர் நம்பி, சுந்தரர், இக்காலத்தில் பெருவழக்காய் உள்ள, ‘அவர்கள்’ என்னும் உயர்வுச் சொல், இங்கு அருகி வந்துள்ளது. ஆரூரர் பாடியதனை இங்கு எடுத்துக்கூறியது. ‘அவரது பாடலைக் கேட்டிருந்தமையால் தாழ்த்தோம,் என்று இறைவன் சேரமான் பெருமாள் நாயனாருக்கு அருளிச்செய்ததனை உட்கொண்டதாம். இது முன்பு நிகழ்ந்ததைக் குறித்து ‘அத்தன்மையன்’ என்றவாறாம். ‘‘கொடியும் விடையும்’ என்றது. ‘விடைக் கொடியும், விடை ஊர்தியும்’ என்றதாம். ’’ கோலக் குழகன்’’ என்றது ஒரு பொருட் பன்மொழி. |