153. பாந்தள்-பாம்பு. பூண் ஆரம்-அணிகின்ற இரத்தின வடம். ‘‘பரிகலம் கபாலம் ; பட்டவர்த்தனம் எருது ; சாந்தம் திருநீறு’’ என்றாற்போல, ஏனையவற்றையும், ‘பூண்ஆரம் பாந்தள்; மஞ்சனசாலை கண் ; பெருந்தேவி மலைமகள் ; கீதம் அருமறை ; முடி சடை ; கோயில் மாளிகை இதயம்’ என மாற்றிக்கொள்க. ‘இவை யெல்லாம் உலகிற் காணப்படாத அதிசயங்கள்’ என்றபடி. பரிகலம்-உண்கலம். கபாலம்- பிரமனது தலைஓடு. பட்டவர்த்தனம்-அரச விருது ; பெருமையுடைத்தாகிய யானையையே பட்டவர்த்தனமாகக் கொள்ளுதல் உலக இயல்பு. ‘வார்ந்த-இடையறாதொழுகிய. ‘‘வார்ந்த கண்ணருவி’’ என்றாராயினும், ‘வார்ந்த அருவிக் கண்’ என்பதே கருத்து, இடத்தைச் சுட்டலே கருத்தாகலின், மஞ்சனசாலை-குளிக்கும் இடம். பெருந்தேவி- அரசமாதேவி. சாந்தம்-உடற் பூச்சு. கீதம்-தான் பாடும் பாட்டு. ‘சாட்டியக்குடியாரது இதயம்’ என்க. ஏந்து எழில் இதயம்-மிக்க எழுச்சியையுடைய நெஞ்சு. ‘‘எழுச்சி’’ என்றது அன்பினை. நெஞ்சிற்கு அழகு தருவது அன்பேயாகலின், அதனை மாளிகைக்கு அமைந்த அழகாகச் சிலேடித்தார். கோயில் மாளிகை-கோயிற்கண் உள்ள கருவறை, |