235. புரியும்-நன்கு செய்யப்பட்ட. இங்கும், ‘எரியோடு ஆடும் ஈசன்’ என்க. இனைபவள் வருந்துபவள். ‘இளையவள், இனையவள்’ என்பன பாடம் அல்ல. வரைசெய்-மலை போலும். மயிலை-மயிலாடுதுறை; மாயூரம். இஃதே இவரது அவதாரத்தலம் என்பது இதனால் அறியப்படும். ‘ஆலி’ என்பது ஆலிநாட்டின் தலைநகராதலாலும், அந்நகரில் உள்ள ‘அமுதன்’ என்னும் திருமால் பெயரே இவருக்குப் பிள்ளைப் பருவத்தில் இடப்பட்டமையாலும், ஆலிநாடு மாயூரத்திற்கு அணிய இடமேயாதலாலும், ‘மயிலை என்பதனைப் பிற ஊர்களாக உரைத்தல் கூடாமை அறிக. ‘‘மறைவல திருவாலி’’ என்றதனால், இவர் அந்தணர் குலத்தினராதல் அறியப்படும். பரவல் பத்து இவை-துதித்தலைச் செய்த பத்துப் பாடல்களாகிய இவைகளை வல்லவர்-அன்புடன் பாட வல்லவர்கள். வாளா, ‘‘பணிவார்’’ என்றாராயினும், ‘சிவலோகத்திற் சென்று பணிவார்’ என்பதே கருத்து என்க. |