177. பந்தம்-கட்டு; பிரிவு-வீடு. தெரி-இவ்விரண்டன் தன்மையையும் ஆராய்கின்ற. ‘தெரிபனுவல், பொருட்பனுவல்’ எனத் தனித்தனி முடிக்க. பொருட் பனுவல் பொருட் பெற்றிகளைக் கூறுகின்ற நூல்கள்; ‘தத்துவ சாத்திரங்கள்’ என்றபடி. ‘பனுவலாகிய படிவழியில்’ என்க. ‘‘சென்று சென்று’’ என்ற அடுக்குப் பன்மை பற்றிவந்தது. அதனால், பொருட் பெற்றிகளை வேறுவேறாய்க் கூறுகின்ற சமய நூல்கள் பலவற்றையும் முறையானே. ‘இதுவே மெய்ந்நூல்; இதுவே மெய்ந்நூல்’ எனத் தெளிந்து அவ்வாற்றானே அறிவு சிறிது சிறிதாக முதிரப்பெற்று' என்பது பொருளாயிற்று. ‘தொன்னூற் பரசமயந் தோறும் அது அதுவே-நன்னூல் எனத் தெரிந்து நாட்டுவித்து’’ என்றார் குமரகுருபர அடிகளும். (கந்தர்கலி 18) சமயங்கள் பலவும் ‘சிவநெறியாகிய மேல் நிலத்திற்குப் படிகள்’ என்பதைச் சிவஞானசித்தி, ‘‘புறச்சமயநெறிநின்றும்’’ என்னும் திருவிருத்தத்தால் இனிதுணர்த்துதல் காண்க. சிவஞான போத மாபாடியத்திலும், ‘சமயங்கள் பலவும் சைவத்திற்குப்படிகள்’ என்பதற்கு இப்பகுதியே (சூ.8.அதி.1) மேற்கோளாகக் காட்டப்பட்டது. சென்று ஏறி-சென்றபின் சிவநெறியை எய்தி. ‘என் சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி’ என்று எடுத்துக் கொண்டு உரைக்க. தெரியினும் தெரிவுறா வண்ணம்-ஆராய்ந்தாலும் விளங்காதபடி. ‘தெரிவுறாவண்ணம் உடனாய் உள்கலந்தோன்’ என்க. எந்தையும் யாயும் யானும் என்று இங்ஙன்-என் தந்தையேயாகியும், என் தாயேயாகியும், யானேயாகியும் இவ்வாறு; இஃது, ‘உடனாய்க் கலந்தோன்’ என்பதனோடு முடியும். ‘யாய்’ என்பதற்குப் பொருள், ‘என் தாய்’ என்பதே யாதலை, ‘‘யாயும் ஞாயும் யாரா கியரோ’’ (குறுந்தொகை-40.) என்பதனான் அறிக. ‘தாய்’ என்பது பாடம் அன்று. இறைவன் உயிர்க்குயிராய்க் கலந்து நிற்றலை இனிது விளக்குவார். ‘‘எந்தையும் யாயும் யானும்என் றிங்ஙன்’’ என்றார். ‘‘வந்து அணுகாது கலந்தோன்’’ என்றது. ‘வேறாய் நின்று, பின்னர் வந்து ஒன்றாய்க் கலவாது, பண்டே ஒன்றாயிருந்து, பின்னர் விளங்கித் தோன்றினான்’ என்றதாம். ஆகவே, முன்னர், ‘‘கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறாவண்ணம்’’ என்றதும் இதுபற்றியேயாயிற்று. சித்துப் பொருளாகிய உயிரினும் நுண்ணியனாதல் பற்றி, ‘‘நுணுகி’’ என்றார். |