125. இத் திருப்பாட்டில்,நகாரங்கட்கெல்லாம்,ஞகாரங்கள் போலியாய் வந்தன.இவ்வாறு வருதலை, ‘‘செய்ஞ்ஞின்ற நீலம்’(திருமுறை-4-80.5.) என்னும் அப்பர் திருமொழியிற் காண்க. மை நின்ற-கருமை நிறம் பொருந்திய ; இனி ‘மேகம் நின்றது போன்ற’ என்றும் ஆம். ‘திரைலோக்கிய சுந்தரன், தனக்குத் தன் உயிர்போன்ற மனத்தைக் கொடுத்தவட்கு, அவளது வளையையும் திரும்பத் தருகின்றிலன் ; இதுபோலும் நன்றியில்லாத செயலை இதற்குமுன் யார் செய்தார் ; ஒருவரும் செய்திலர். அதனால், இவன் மெய்ம்மை பொருந்திய அன்பராயினார்க்குத் தானும் மெய்ம்மையான அருளில் பொருந்தவேண்டிய நன்றியறியும் பண்பு இல்லாதவன் ஆகின்றான்’ எனப் பழித்தவாறு, காதல் மிகுதியாற் கூறினமையின், இப் பழிப்பு அமைவதாயிற்று. இந் நின்ற-இங்கு நிற்கின்ற. கோவணவன்-கோவணமாக உடுத்த உடையை யுடையவன். |