143. யோகு-யோகம். ‘‘மங்கையோடு இருந்தே யோகம் செய்வான்’’ என்றது, ‘ஒன்றிலும் தோய்விலனாய், ஒன்றொடொன் றொவ்வா வேடம் ஒருவனே தரித்துக்கொண்டு நிற்பான்’ (சிவஞான சித்தி சூ.1.51.) என்றதாம். ‘‘நேரிழையைக் கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் வென்றானை’’ என்ற அப்பர் திருமொழியைக் காண்க (திருமுறை-6-50.3) இவ்வாசிரியர், தம்மை, அங்கை ஓடு ஏந்திப் பலி திரிபவராகக் கூறினமையின், நிறைந்த துறவர் என்பது விளங்கும். ஆழி-ஆணைச் சக்கரம். ‘திளைப்பதும் சிவன் அருட்கடல்’ என்றாராயினும், ‘சிவனது அருட்கடலிலும் திளைப்பர் என்றல் கருத்தென்க. ‘அரசு வீற்றிருத்தல் இப்பிறப்பிலும், சிவனது அருட்கடலில் திளைத்தல் இப்பிறப்பு நீங்கிய பின்னரும் என்பது ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது. |