சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

1. கோயில்


7.

தனதன்நற் றோழா ! சங்கரா ! சூல
   பாணியே ! தாணுவே ! சிவனே !
கனகநற் றூணே ! கற்பகக் கொழுந்தே !
   கண்கள்மூன் றுடையதோர் கரும்பே !
அனகனே ! குமர விநாயக சனக !
   அம்பலத் தமரர்சே கரனே !
நுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்
   தொண்டனேன் நுகருமா நுகரே.                (7)
 

7, தனதன்-குபேரன்.தாணு-நிலைபெற்றிருப்பவன்.‘‘கனகநற்றூணே’’
என்றதை,   ‘‘மாசொன்றில்லாப்-பொற்றூண்காண்’’ (திருமுறை-6,8,1)
என்றதனோடு   வைத்துக்  காண்க.  கொழுந்து-தளிர்;  இஃது  அழகு
மிக்கதாய்  இன்பம்  தருவது கண்கள்-கணுக்களைக்  குறித்த சிலேடை.
அனகன்-பாவம்    இல்லாதவன்;    என்றது.   ‘வினைத்   தொடக்கு
இல்லாதவன்’  என்றதாம். குமரன்-முருகன், ‘குமர  விநாயகர்’ என்னும்
உயர்திணை   உம்மைத்   தொகை   ஒருசொல்லாய்ப்பின்,  ‘‘சனகன்’’
என்பதனோடு,  நான்காவதன் தொகைபடத் தொக்கது.  சனகன் தந்தை.
அமரர்  சேகரன்-தேவர்  கூட்டத்திற்கு  மகுடம்போல  விளங்குபவன்.
இஃது ஒருசொல் தன்மைப்பட்டு, ‘அம்பலத்து’  என்றதனோடு தொகைச்
சொல்லாயிற்று.  ‘அமரசேகரன்’  எனவும் பாடம் ஓதுப. ‘நின்’ என்பது,
திருமுறைகளில்,  ‘நுன்’  என  வருதலை  அறிந்துகொள்க.  ‘‘நுகருமா
நுகரே’’ என்றது.‘‘நுன’’    என்றதற்குரிய  மோனை  நோக்கியாகலின்,
‘உனகழலிணை’   என்பது   பாடம்   ஆகாமை  அறிக.   ‘‘இணை’’ 
என்றமையின்,  ‘‘இனிதா’’ என  ஒருமையாகக்  கூறினார். நுகர்தல் - அனுபவித்தல்.  


மேல்