சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்


107. 
  

தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும்
   சங்கமும் சகடையின் முழக்கும்
குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும்
   குண்டையும் குழாங்கொடு தோன்றும்
கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே.              (7)
 

107. தழை-வில்வம், வன்னி முதலியவற்றின் இலை. மொழுப்பு-முடி.
சங்கம்-சங்க  வளையல் ; இஃது அம்மைபாகத்தில் உள்ளது. ‘‘சகடை’’
என்றது,  உடுக்கையை,  தெண்டு-திரட்சி, குண்டை-எருது, ‘தழைதவழ்
மொழுப்பு  முதலாகக் குண்டையீறாக  உள்ளனவே  அவரது  வாழ்வு
போன்றன’  என்க.  குழாங்கொடு  தோன்றும்  ‘கனகம்’ என்க. ‘மிக்க
பொன்’  என்றவாறு.  கிழை-ஒளி. ‘கனகத்தைச் சொரியும் நீரையுடைய
பழனங்கள்  கம்பலை செய்கின்ற கீழ்க்கோட்டூர்’ என்க.  மழை-மேகம்,
‘‘போன்றன’’   என்றதில்  போறல்’  ஆக்கப்  பொருட்டாய்  நின்றது.
‘அவரை   என்மனம்   காதலிக்கின்றது   வியப்பாகின்றது’   என்பது
குறிப்பெச்சம். 


மேல்