3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
165. | வாழிஅம் போதத் தருகுபாய் விடயம் வரிசையின் விளங்கலின் அடுத்த சூழலம் பளிங்கின் பாசல ராதிச் சுடர்விடு மண்டலம் பொலியக் காழகில் கமழு மாளிகை மகளிர் கங்குல்வாய் அங்குலி கெழும யாழொலி சிலம்பும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. (4) |
165. வாழி, அசைநிலை. அம்பு ஓதத்து-நீரின் அலைகளில். நீர், வடவாற்றில் உள்ளது. பாய-பரவிய; இதன் இறுதியகரம் தொகுத்தலாயிற்று. விடயம்-பொருள்கள். அடுத்த சூழல்-சார்ந்துள்ள சுற்றிடம். ‘பளிங்கின் மண்டலம்’ என இயையும். பாசலராதிச் சுடர்விடு மண்டலம்-பச்சிலையோடு கூடிய மலர் முதலியவற்றின் உருவத்தைப் பொருந்திய வட்டம். ‘வடவாற்றில் உள்ள நீரின் அலைகள் உயர்ந்தெழும் போது வெள்ளிய அவ்வலைகளில் அருகில் உள்ள சோலையின் தழைகள், பூக்கள் முதலியன தோன்றுதல், தஞ்சை நகரத்தைச் சுற்றிலும் பச்சிலையும், பூவும் ஓவியமாகத் தீட்டப்பட்ட பளிங்குச்சுவர் அமைக்கப்பட்டது போலத் தோன்றுகின்றது’ என்பதாம். ‘விளக்கலின்’ என்பது பாடமாயின், ‘அந்நகரம் விளக்கி நிற்றலின்’ என உரைக்க. காழ்-வயிரம், ‘மாளிகைக்கண்’ என ஏழாவது விரிக்க. அங்குலி கெழும-விரல் பொருந்த. சிலம்பும்-ஒலிக்கும். ‘இவர்க்கே யாழொலி சிலம்பும்’ என முடிக்க. இதனால். ‘தஞ்சை நகர மகளிர் இரவும் பகலும் இராசராசேச்சரமுடையாரை யாழிசையால் துதிப்பர்’ என்பது கூறப்பட்டது. |