3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
17. திருவிடைமருதூர்
181. | கலங்கலம் பொய்கைப் புனல்தெளி விடத்துக் கலந்தமண் ணிடைக்கிடந் தாங்கு நலங்கலந் தடியேன் சிந்தையுட் புகுந்த நம்பனே ! வம்பனே னுடைய புலங்கலந் தவனே ! என்றுநின் றுருகிப் புலம்புவார் அவம்புகார் அருவி மலங்கலங் கண்ணிற் கண்மணி யனையான் மருவிடந் திருவிடை மருதே. (9) |
181. ‘சேற்றால் கலங்கல் பெற்ற நீர் தேற்றாங்கொட்டை சேர்ந்ததனால் தெளிவுபெற்ற பின்னர் அச்சேற்றோடே இருப்பினும் கலங்கல் இன்றித் தெளிந்தே நிற்றல் போல’ என்பது முதல் அடியின் பொருள். தெளிவிடத்து-தெளியும்பொழுது. கலங்கல் நீர் தெளிவு பெறுதல் தேற்றாங்கொட்டையால் என்பது நன்கறியப்பட்டதாகலின், அதனைக் கூறாராயினார். நலம்-திருவருள். ‘‘கலந்து’’ என்றதனை, ‘கலக்க’ எனத் திரிக்க. கலந்து, அதனால் உலகியலாற் கலங்காதிருக்குமாறு’ எனத் தன் காரியம் தோற்றி நின்றது. புலம், ஐம்புலன்; இஃது அவற்றான் வரும் இன்பத்தைக் குறித்து நின்றது. திருவருள்கைவரப் பெற்றோர்க்கு ‘பெற்ற சிற்றின்பமே பேரின்பமாய்’ விளைதலின் (திருவுந்தியார்-33.) ‘‘புலங்கலந்தவனே’’ என்றார். ‘‘வம்பனேனுடைய புலங்கலந்தவனே’’ என்றது, உருகிப் புலம்புவாரது கூற்றை, கொண்டுகூறியது. எனவே, ‘‘வம்பனேன்’’ என்றது பன்மை யொருமை மயக்கமாம். புலம்புவார் - அழுகின்றவர். அவம் புகார்-வீண் செயலிற் செல்லாதவர். ‘புலம்புவாரும், அவம் புகாரும் ஆகிய அவரது கண்ணில்’ என்க. அருவி மலங்கல் கண்-அருவி போல நீர் மல்குதலையுடைய கண். அம், சாரியை, கண்மணிபோறலாவது, இன்றியமையாப் பொருளாகி நிற்றல். |