சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

6. திருவாவடுதுறை


66.

மானேர் கலைவளை யுங்கவர்ந்
   துளங்கொள்ளை கொள்ள வழக்குண்டே
தேனே அமுதேஎன் சித்தமே
   சிவலோக நாயகச் செல்வமே
ஆனேஅ லம்பு புனற்பொன்னி
   அணிஆ வடுதுறை அன்பர்தம்
கோனேநின் மெய்யடி யார்மனக்
   கருத்தை முடித்திடுங் குன்றமே.                 (9)
 

66. மான் - மான்போன்றவளாகிய என்மகளது. ஏர் கலை - அழகிய
உடை.   வழக்கு  உண்டே  -  நீதி  உண்டோ.  ஆனே  அலம்பு  -
ஆக்களே,  ஒலிக்கின்ற;  ஆவடுதுறை  என்க.  ‘‘ஆனே’’  என்றதனை
இறைவனுக்கு  ஏற்றி உரைப்பாரும், ‘அவ்விடத்தே’ என  உரைப்பாரும்
உளர்.  ‘ஆவடு  துறைக் குன்றமே’ என இயைக்க.  இப்பாட்டு முழுதும்
செவிலி கூற்று.


மேல்