3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
91. | கலைகடம் பொருளும் அறிவுமாய் என்னைக் கற்பினிற் பெற்றெடுத் தெனக்கே முலைகடந் தருளுந் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் மலைகுடைந் தனைய நெடுநிலை மாட மருங்கெலாம் மறையவர் முறையோத் தலைகடல் முழங்கும் அந்தண்நீர்க் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (1) |
91. ‘‘அறிவு’’ என்றது, அக் கலைகளின் பொருள்களை அறிந்த அறிவை. ‘‘அறிவுமாய்’’ என்ற எச்சம், ‘‘நல்ல’’ என்னும் பெயரெச்சக் குறிப்பொடு முடியும். ‘என்னைப்பெற்று, எனக்கே முலைகள் தந்தருளும் தாய்’ என்க. கற்பினில் பெற்று. கற்புக் கடம்பூண்ட நெறியானே பெற்று. எடுத்து-கையில் ஏந்தி. ‘‘எனக்கே’’ என்ற ஏகாரம் தேற்றம். ‘‘நல்ல’’ என்றதில் நன்மை, அருள், போலும். அசைநிலை, மருங்கு, ஏழனுருபு. முறை ஓத்து-ஒலி ஒழுங்கினை யுடைய வேதம். ‘கடல்போல முழங்கும்’ என உவம உருபு விரிக்க. ‘‘களத்தூர்’’ என்பது, ‘களந்தை’ என மரூஉவாக்கப்பட்டது. ‘ஆதித்தேச்சரம்’ என்பது அங்குள்ள திருக்கோயிலின் பெயர். |