5. கண்டராதித்தர் திருவிசைப்பா
20. கோயில்
200. | பாரோர் முழுதும் வந்தி றைஞ்சப் பதஞ்சலிக் காட்டுகந்தான் வாரார் முலையாள் மங்கை பங்கன் மாமறை யோர்வணங்கச் சீரால் மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத் தாடுகின்ற காரார் மிடற்றெம் கண்ட னாரைக் காண்பதும் என்றுகொலோ ! (6) |
200. ‘‘முழுதும்’’ என்பது ‘எல்லாரும்’ எனப் பொருள்தந்துநின்றது. பதஞ்சலிக்கு-பதஞ்சலி முனிவர் பொருட்டாக, ஆட்டு உகந்தான்-ஆடுதலை விரும்பினான். ‘இறைவனது திருநடனத்தைத் தில்லைக்கண்ணே காண முதற்கண் தவம் செய்திருந்தவர் வியாக்கிரபாத முனிவர்’ என்பதும், பின்பு பதஞ்சலி முனிவர் அவருடன்வந்து சேர்ந்தபின்பே இருவருக்குமாக இறைவன் தில்லையில் திருநடனம் காட்டினான்’ என்பதும் கோயிற் புராண வரலாறு. ‘‘பதஞ்சலிக் கருளிய பரமநாடக’’ என்று அருளிச்செய்தார் திருவாசகத்தும் (கீர்த்தி-138.) கண்டன்-தலைவன், ‘கண்டு அன்னாரை’ எனப் பிரித்து உரைத்தலுமாம்; இஃது ஒருமைப் பன்மை மயக்கம.் |