சொல்லகராதிச் சுருக்கம்

8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா

26. கோயில்


263.

ஆருயிர் காவல்இங் கருமை யாலே
   அந்தணர் மதலைநின் னடிபணியக்
கூர்நுனை வேற்படைக் கூற்றஞ்சாயக்
   குரைகழல் பணிகொள மலைந்ததென்றால்
ஆரினி அமரர்கள் குறைவி லாதார்
   அவரவர் படுதுயர் களைய நின்ற
சீருயி ரேஎங்கள் தில்லை வாணா
   சேயிழை யார்க்கினி வாழ்வரிதே,               (7)
 


263,    இங்கு ஆருயிர் காவல் அருமையால் - இவ்வுலகில் தனது
அரிய   உயிரைக்   காத்துக்கொள்ளுதல்  இயலாமையால்.  அந்தணர்
மதலை,  மார்க்கண்டேயர்.  ‘சாய  மலைந்தது’  என இயையும்.  குரை
கழல்   -   ஒலிக்கின்ற  கால்  அணிந்த  பாதம்.  பணிகொள-செயல்
கொள்ளும்படி.  மலைந்தது,  தொழிற்  பெயர். ‘மலைந்தது  குரைகழல்
பணிகொள  என்றால்’ என மாற்றுக. ‘கூற்றுவனைச் சாய்த்தது  திருவடி
ஒன்றினாலே  என்றால்’  என, இறைவனது பெருமையை  வியந்தவாறு.
‘‘குறைவு’  என்றது,  அடங்குதல்’  என்னும்  பொருட்டாய்,  ’’குறைவு
இலாதார்’’  என்றது, ‘உனக்கு அடங்குதல் இல்லாதவர்’ எனப் பொருள்
தந்தது.   சீர்  உயிரே-  சிறந்த  உயிர்போல்பவனே.   ‘ஏனைத்தேவர்
ஒருவர்க்கும்   இல்லாத   உனது  இப்பெருமையை   உணருந்தோறும்
சேயிழையார்க்கு இனி வாழ்வு அரிது என இயைபு படுத்து உரைக்க.


மேல்