3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
105. | தோழி யாம் செய்த தொழில்என் எம்பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் ஊழிதோ றூழி உணர்ந்துளங் கசிந்து நெக்குநைந் துளங்கரைந் துருக்கும் கேழலும் புள்ளு மாகிநின் றிருவர் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வாழிய மணியம் பலவனைக் காண்பான் மயங்கவும் மாலொழி யோமே. (5) |
105. ‘தோழி, மணியம்பலவனைக் காண்பான் இருவர் கேழலும் புள்ளுமாகி நின்று மயங்கவும், யாம் மால் ஒழியோம் ; எம் உள்ளம் ஊழிதோறூழி அவனை உணர்ந்தமையால் அஃது இப்பிறப்பில் கசிந்து நெக்கு நைந்து கரைந்து உருகாநின்றது ; ஆயினும், யாம் அவனது துணைமலர்ச் சேவடி காண்பான் செய்த தொழில் என்’ எனக் கூட்டி உரைக்க. ‘‘தொழில்’’ என்றது, பணியை. ‘‘என்’’ என்றது, யாதும் இன்மையைக் குறித்து நின்றது. மனம் உருகினும் பணியின்றி அவனைக் காண்டல் கூடாமையின், ‘எம் பெருமான் துணைமலர்ச் சேவடி காண்பான் யாம் செய்த தொழில் என்’ என்றாள். ‘உணர்தலால்’ என்பது, ‘‘உணர்ந்து’’ எனத் திரிந்து நின்றது. சிவபிரானைப் பல பிறப்புக்களில் நினைந்ததன் பயனே ஒரு பிறப்பில் அவன்பால் விளையும் அன்பாகும் ஆதலின், ‘உளம் ஊழிதோறூழி உணர்ந்து கசிந்து உருகும்’ என்றாள். பின்னர் வந்த ‘‘உள்ளம்’’, சுட்டுப் பெயரளவாய் நின்றது. இங்குக் கம்பலை செய்வது கீழ்க்கோட்டூரே என்க. ‘‘வாழிய’’ என்றது அசைநிலை, |