3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
13. கங்கைகொண்ட சோளேச்சரம்
142. | அங்கைகொண் டமரர் மலர்மழை பொழிய அடிச்சிலம் பலம்பவந் தொருநாள் உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை உய்யக்கொண் டருளினை ! மருங்கிற் கொங்கைகொண் டனுங்குங் கொடியிடை காணிற் கொடியள்என் றவிர்சடை முடிமேற் கங்கைகொண் டிருந்த கடவுளே! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. (10) |
142. ‘‘அங்கை கொண்டு’’ என்றதில் ‘‘கொண்டு’’ மூன்றாவதன் சொல்லுருபு. அலம்ப-ஒலிக்க. ‘‘உம் கை’’ என்றதில் ‘‘உம்’’ஒருமைப் பன்மை மயக்கம். ‘உன் கை’ எனப் பாடம் ஓதினும் இழுக்காது. ‘‘உம் கை கொண்டு’’ என்றதில். ‘‘கொண்டு’’ என்றது, ‘எடுத்து’ என்றவாறு. ‘மருங்கிற் கொடியிடை‘ என இயையும். ‘பக்கத்தில் இருக்கும் உமாதேவி’ என்பது பொருளாம். ‘‘கொங்கை கொண்டு’’ ‘‘கங்கை கொண்டு’’ என்றவற்றில், ‘‘கொண்டு’’ என்றவை, ‘தாங்கி’ என்னும் பொருளன. அனுங்கும்-மெலிகின்ற (இடை என்க). ‘‘கொடியள்’’ என்றதில், ‘ஆவள்’ என்னும் ஆக்கம் விரிக்க. ‘கொடியளாவள்’ என்றது, ‘வெகுள்வாள்’ என்றவாறு. ‘உமாதேவி காணின் வெகுள்வாள் என்று கருதியே சிவபிரான் கங்கையைச் சடையில் மறைத்து வைத்துள்ளான்’ என்றது, தற்குறிப்பேற்ற அணி. |