சொல்லகராதிச் சுருக்கம்

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்


284.

மாதொர் கூறன்வண் டார்கொன்றை மார்பனென்
றோதில் உய்வன்ஒண் பைங்கிளி யேஎனும்;
சேதித் தீச்சிரம் நான்முக னைத்தில்லை
வாதித் தீர்என்ம டக்கொடியையே                  (6)
 


284.     ‘ஒண் பைங்கிளியே, மாதொர் கூறன், கொன்றை மார்பன்
என்றாற்போலத்   தில்லையானது   பேச்சினை  நீ  பேசினால்  நான்
உய்வேன்;  (இல்லாவிடில்  உய்யமாட்டேன்) என்று கிளியிடம் சென்று
வேண்டுவாள்’ என்க. வண்டு ஆர்-வண்டுகள் ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற)
;  ‘நிறைந்த’  என்றலுமாம்.  ‘நான்  முகனைச்  சிரம் சேதித்தீர்’ என
மாற்றுக.  சேதித்தீர்-அறுத்தவரே. ‘சிரம் சேதித்தீர்’ என்றது. ‘ஒறுத்தீர்’
என்னும்   பொருட்டாய்.   ‘நான்முகனை’  என்னும்  இரண்டாவதற்கு
முடிபாயிற்று.     ‘தில்லைக்கண்     நின்று     வாதித்தீர்’   என்க.
வாதித்தீர்-வருந்தப் பண்ணினீர். ‘இது தகுமோ’ என்பது குறிப்பெச்சம்.
இத்திருப்பாட்டின் ஈற்றடி இறுதிச்சீர் வேறுபட்டு வந்தது.


மேல்