182. ஒருங்கு - ஒற்றுமைப்படுகின்ற. இருகண்ணும் ஒற்றுமைப்படுதலாவது, ஒன்றனையே நோக்குதல். இதனை எடுத்தோதியது, உறங்குங்காலும் அவை ஒருங்கே உறங்கும் என்றற்கு. ‘இருங்கண்ணின்’ எனப் பாடம் ஓதுதல் சிறவாது. கண்ணின்-கண்ணினையுடைய. ‘‘புன்மாக்கள் ’’ என்றது, மெய்யுணர்வில்லாத மக்களையும் உளப்படுத்து. கருமை இன அடையாதலின், ‘‘ஓர் கருங்கண்’’ என்றதனை, ‘ஒருகண்’ என்றே கொள்க. ‘‘ஓருகண்’’ என்பதில் ‘ஒன்று’ என்றது ‘முதல்வகையான் ஒன்று’ என்றவாறு. அஃதாவது, ‘எண்ணில் புன்மாக்களது இருகண்களும் உறங்குகின்ற நடுநல் யாமத்தில், தமது ஒருகண்மாத்திரம் செழுஞ்சுடர் விளக்கங் கலந்து பொருள்களைக் கண்டாற்போல’ என்றதாம். நின்று இமைக்கும் செழுஞ்சுடர்-நிலைபெற்று ஒளிரும் செழுமையான விளக்கு . விளக்கம்- ஒளி, கலந்து உணர்-இறைவனது திருவருளிற் கலந்து மெய்ம்மையை உணர்ந்த. கருவூர்- கருவூர்த் தேவரது. இறைவன் நடுநல் யாமத்து வந்ததாக இவர் பலவிடத்துக் கூறலின், இவரக்கு அவன் அருள்புரிந்த நேரம் இடையாமமாதல் கூடும். இனி, அஞ்ஞானத்தின் மிகுதியை இவ்வாறு உருவகமாகக் கூறினார் எனினுமாம். மருதம்-மருதநிலம். அதன்கண் உள்ள யாழில் பாடப்படுவது செவ்வழிப்பண் எனினும், பஞ்சமும் பாடப்படுவதன்றாகாது என்க. மருதூராகலின் ஆங்கு உள்ளது மருதயாழேயாம். ‘மருதயாழொடு’ என ஒடுவுருபு விரிக்க. ‘‘உதிப்பவரும்’’ என்றது. ‘உதித்தலால் அதனைக் கேட்டு வருகின்ற’ என்பதாம். அஃதாவது, இத்திருப்பதிகத்தை யாவர் மருதயாழோடு பாடினும் இடைமருதுறை இறைவன் அவர்பால் வருவான்’ என்றவாறு. இதனால், இத்திருப்பாட்டுத் திருக்கடைக்காப்பாயிற்று. முன்னரும் (பாட்டு-179.) ‘‘மழலையாழ் சிலம்ப வந்தகம் புகுந்தோன்’’ என்றமையால், இறைவன் இவர்பால் இசைவிருப்பினன்போல வந்து அருள் செய்தான் எனக் கொள்ளல் தகும். |