8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
26. கோயில்
257. | வாரணி நறுமலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை வாரணி வளமுலை மெலியும் வண்ணம் வந்துவந் திவைநம்மை மயக்கு மாலோ! சீரணி மணிதிகழ் மாட மோங்கு தில்லையம் பலத்தெங்கள் செல்வன் வாரான் ஆரெனை அருள்புரிந் தஞ்சல் என்பார் ஆவியின் பரமென்றன் ஆதரவே. (1) |
257. வார்-தேன் ஒழுகுகின்ற. அணி-அழகிய. ‘நறுமலரை வண்டு கெண்டி (கிளறி)ப் பாடுகின்ற பஞ்சமப் பண்’ என்க. ‘‘மாலை’’ இரண்டனுள் பின்னது மாலைக் காலம். ‘பஞ்சமமும், செண்பக மாலையும், மாலைக் காலமும் ஆகிய இவை நம் வனமுலைகள் மெலியுமாறு வந்து வந்து நம்மை மயக்கும்’ என்க. ஆல், ஓ அசைநிலைகள். சீர் அணி-அழகைக்கொண்ட. ‘‘ஆர் எனை அருள்புரிந்து அஞ்சல் என்பார்’’ என்றதை இறுதியிற் கூட்டுக. ‘‘எனை’’ என்றது, ‘‘அஞ்சல் என்பார் என்பதனோடு முடியும். என் ஆதரவு ஆவியின் பரம் அன்று-எனது காதல் என் உயிரின் அளவினதன்று; மிக்கது, ‘‘சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்-உயிர்தவச் சிறிது காமமோபெரிதே’’ என்னும் குறுந்தொகைப் பகுதியை நோக்குக (18). ஆதரவு-விருப்பம்; காதல். ‘அஃது என்னால் தாங்கும் அளவினதாய் இல்லை’ என்றபடி. |