9. சேதிராயர் திருவிசைப்பா
28. கோயில்
285. | கொடியைக் கோமளச் சாதியைக் கொம்பிளம் பிடியை என்செய்திட் டீர்பகைத் தார்புரம் இடியச் செஞ்சிலை கால்வளைத் தீர்என்று முடியும் நீர்செய்த மூச்சறவே. (7) |
285. ‘‘பகைத்தார் புரம்.. .. .. .. கால்வளைத்தீர்’‘ என்பதை முதலிற் கொள்க. கொடி-பூங்கொடிபோன்றவள். கோமளச்சாதி-அழகிய செண்பகப் பூப்போன்றவள். கொம்பு-பூங்கொம்பு போன்றவள். ‘கொம்பினை’ என இங்கும் இரண்டாவது விரிக்க. இளம் பிடி- இளமையான பெண்யானை போன்றவள். இவையெல்லாம் தலைவியையே குறித்து வந்த பலபெயர்கள். இடிய-அழியும்படி. செஞ்சிலை-நிமிர்ந்து நின்ற வில்லை. கால் வளைத்தீர்-இரண்டு காலும் அணுக வருமாறு வளைத்தவரே. ‘பகைத்தார் புரம் இடியச் செய்தது பொருந்தும்; காதலித்தாளை இடியச் செய்தல் பொருந்துமோ’ என்பது குறிப்பு. ‘நீர் செய்த மூச்சறவு என்று முடியும்’ என மாற்றுக. மூச்சறவு-இறந்துபாடு; இஃது அதற்கு ஏதுவாய வருத்தத்தைக் குறித்து நின்றது. என்று முடியும்-எந்நாள் நீங்கும். ‘நீங்குதல் இன்றி. இறந்துபாட்டினைச் செய்தேவிடும்போலும்’ என்பது குறிப்பெச்சம். |