சொல்லகராதிச் சுருக்கம்

1. திருவிசைப்பா

3. கோயில்


23.

‘உறவாகிய யோகமும் போகமுமாய்
   உயிராளீ !’ என்னும்என் பொன் : ‘ஒருநாள்,
சிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்
   சிலைகொண்டு பன்றிப்பின் சென்று நின்ற
மறவா ! ’ என் னும்; மணி நீரருவி
   மகேந்திர மாமலை மேல்உறையும்
குறவா ! ’ என் னும் ; ‘குணக் குன்றே ! ’ என்னும்;
   குலாத்தில்லை யம்பலக் கூத்தனையே.            (1)
 

23. உறவு-அடையப்படும்  பொருள். ‘‘யோகம்’’ என்றது, முத்தியைக்
குறித்தது.  உயிர்  ஆளி-உயிர்களை  ஆள்பவனே.  என்னும்-  என்று
பிதற்றுவாள்.  ‘‘பொன்’’  என்றது, காதற்சொல். ‘ஒருநாள் சென்று’ என
இயையும்.   சிறவாதவர்-இழிந்தோர்;   சிவநெறியைக்   கடைப்பிடியாது
கைவிட்டவர்.   ‘தேவராலும்  அழிக்க  இயலாத  வலிய   திரிபுரத்தை
அழிக்க  வில்லேந்திய  பெருமான்,  சிறிய  பன்றிப்பின்  வில்லேந்திச்
சென்றான்’ என, அவனது எளிவந்த தன்மையை விதந்து  உருகியவாறு.
சிவபிரான்  அருச்சுனன்  பொருட்டு வேடனாய்ப் பன்றிப்பின்  சென்ற
வரலாறு    வெளிப்படை.    மகேந்திர   மாமலை,   திருவாசகத்துட்
கூறப்பட்டது. ‘பேரரசாகிய மலை’ எனக் காரணப் பெயராக்கி, ‘கயிலாய
மலை  ’  என  இங்கு  உரைத்தலும்  ஆம்.  ‘‘மகேந்திரம்’’ என்றதை,
‘மயேந்திரம்’ என்றே ஓதுவாரும் உளர்.   குறவன்   -  மலைவாணன்.
குலாத்தில்லை- விளக்கத்தையுடைய     தில்லை.      திருவாசகத்துட்
குலாப்பத்தைக் காண்க.


மேல்