2. சேந்தனார் திருவிசைப்பா
5. திருவீழிமிழலை
57. | பாடலங் காரப் பரிசில்கா சருளிப் பழுத்தசெந் தமிழ்மலர் சூடி நீடலங் காரத் தெம்பெரு மக்கள் நெஞ்சினுள் நிறைந்துநின் றானை வேடலங் காரக் கோலத்தின் னமுதைத் திருவீழி மிழலையூர் ஆளும் கேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக் கெழுமுதற் கெவ்விடத் தேனே. (12)திருச்சிற்றம்பலம் |
57. பாடு அலங்காரப் பரிசில்-பாடுகின்ற அணிநிறைந்த பாட்டிற்குப் பரிசாக. அலங்காரம், ஆகுபெயர். காசு-பொற்காசு. பழுத்த-அன்பு நிறைந்த, ‘‘எம்பெருமக்கள்’’ என்றதை முதற்கண் கூட்டி, ‘அவர்தம் பழுத்த செந்தமிழாகிய மலரைச் சூடிக்கொண்டு, நீடு அலங்காரத்துடன் அவர்தம் நெஞ்சினில் நிறைந்துநின்றாளை’ என உரைக்க. ‘‘எம்பெருமக்கள்’’ என்றது, ஞானசம்பந்தர், நாவுக்கரசர் என்னும் இவரையே என்பது வெளிப்படை. ‘‘இருந்து நீர்தமிழ் கேட்கும் இச்சையாற் காசு நித்தல் நல்கினீர் அருந்தண் வீழிகொண்டீர், அடி யேற்கும் அருளுதிரே’’ எனச் சுந்தரரும் (திருமுறை -7. 88. 8) இத்தலத்தில் அருளிச் செய்தமை காண்க. வேடு அலங்காரக் கோலம்- வேட்டுவச் சாதியாகப் புனைந்துகொண்ட வேடம். இஃது அருச்சுனன் பொருட்டு என்பது மேலே சொல்லப்பட்டது. கேடு இல் அம் கீர்த்தி-கெடுதல் இல்லாத அழகிய புகழ். கெழுமுதல்-கூடுதல். ‘எவ்விடத்தேன்’’ என்றதனால், இவ்விறுதித் திருப்பாடலில் பணிவு கூறினார் என்க. |