சொல்லகராதிச் சுருக்கம்

2. சேந்தனார் திருவிசைப்பா

5. திருவீழிமிழலை


49.

தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த
   சசிகுலா மவுலியைத், தானே
என்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி
   எழுஞ்செழுஞ் சுடரினை, அருள்சேர்
மின்னெடுங் கடலுள் வெள்ளத்தை, வீழி
   மிழலையுள் விளங்குவெண் பளிங்கின்
பொன்னடிக் கடிமை புக்கினிப் போக
   விடுவனோ பூண்டுகொண் டேனே!               (4)
 

49.  தகைத்த- தடுத்து நிறுத்திய. சசி-சந்திரன். குலா-விளங்குகின்ற.
மவுலி-முடியையுடையவன்.  ஆகுபெயர்.  கமலம் மூன்று. ஆதாரங்கள்
ஆறனுள்  மேல்  உள்ள  மூன்று.  கீழ்  உள்ள மூன்றில் பிறகடவுளர்
இருத்தலின்,  இவற்றையே  கூறினார்.  ‘அருள்சேர் நெடுங்கடல்’ என
இயையும்.    சேர்-திரண்ட.   மின்-ஒளி.   கடல்,   ஆகுபெயராகாது.
இயற்பெயராயே நின்று, பள்ளத்தையே உணர்த்திற்று. ‘‘வெள்ளம்’’ என
வாளா  கூறினாராயினும்  இன்பம்  சேர்  (திரண்ட)  வெள்ளம்’  என
உரைக்க   வெள்ளம்   நீர்ப்பெருக்கு   அருளின்வழியே   ஆனந்தந்
தோன்றுதலின்,  அதனைக்  கடலாகவும்,  ஆனந்தத்தை   அதன்கண்
நிறைந்த  நீர்ப்பெருக்காகவும்  உருவகித்தார்.  சிவபிரானை, ‘‘பளிங்கு’’
என்றது  திருநீற்றொளி  பற்றி. பக்கு- புகுந்தபின். அவ்வடியை  இனிப்
போகவிடுவனோ இறுகப்பற்றிக்கொண்டேனாதலின்’ என்க.  


மேல்