சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

9. கோயில்


93. 
  

கரியரே இடந்தான் : செய்யரே யொருபால் ;
   கழுத்தில்ஓர் தனிவடம் சேர்த்தி
முரிவரே; முனிவர் தம்மொடால் நிழற்கீழ்
   முறைதெரிந் தோருடம் பினராம்
இருவரே; முக்கண் நாற்பெருந் தடந்தோள்
   இறைவரே; மறைகளுந் தேட
அரியரே; ஆகில், அவரிடம் களந்தை
   அணிதிகழ் ஆதித்தேச் சரமே.                  (3)
 

93.‘‘ஒருபால்’’ என்றதனை, ‘மற்றொருபால்’ எனக் கொண்டு,  ‘இடம்
கரியரே ; மற்றொருபால் செய்யரே என உரைக்க’ ‘‘வடம்’’ என்றதனை,
எலும்பின்   வடமாகக்  கொள்க.  இதனால்,  சிவபிரான்   கழுத்திலும்
இவ்வடம்   உண்மை  பெறப்படும்.  முரிவர்-வளைவார்  ;  ஆடுவார்.
‘விளங்குவார்’ எனவும் உரைப்பர். முறை தெரிந்து-நூலை  ஆராய்ந்து ;
இவ்வெச்சம்’ ‘‘ஆம்’’ என்பதனோடு முடியும் முன்பு, ‘‘கரியர், செய்யர்’’
என்றது,  நிறங்கள்  மாத்திரையின் வியந்தது. இங்கு,  ‘‘ஓருடம்பினராம்
இருவர்’’  என்றது. ஆண்மையும், பெண்மையுமாய் நிற்றலை  வியந்தது.
‘‘ஆகில்’’  என்றது,  ‘இவையெல்லாம் உண்மையாயின்’ எனப் பொருள்
தந்து,  ‘இவையெல்லாம்  உண்மையாதல்போல,  அவருக்கு இடமாவது
ஆதித்தேச்சரமாதலும்    உண்மையாம்’   என   உவமப்    பொருள்
தோற்றிநின்றது,     ‘‘நீரின்றமையா     துலகெனின்’’     (குறள்-20.)
என்பதிற்போல. ஈற்றில் நின்றதொழிய, ஏனைய ஏகாரங்கள், தேற்றம். 


மேல்