3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
13. கங்கைகொண்ட சோளேச்சரம்
136. | ஐயபொட் டிட்ட அழகுவா ணுதலும், அழகிய விழியும், வெண் ணீறும், சைவம்விட் டிட்ட சடைகளும், சடைமேல் தரங்கமுஞ் சதங்கையுஞ் சிலம்பும் மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர் முகம்மலர்ந் திருகண்நீர் அரும்பக் கைகள்மொட் டிக்கும் என்கொலோ ! கங்கை கொண்டசோ ளேச்சரத் தானே. (4) |
136. ஐய பொட்டு-அழகிய திலகம். ‘அளக வாள்நுதல்’ என்பது பாடம் அன்று. சைவம்-சிவ வேடம். சிவபெருமானுக்கு உரிய சிறப்பு அடையாளங்களுள் சடை சிறந்ததொன்றாதலின், ‘‘சைவம் விட்டிட்டசடைகள்’’ என்றார். நடனம் செய்பவர் காலில் சதங்கை அணிதல் இயல்பு என்க. மொய் கொள்-சூழ்தலைக் கொண்ட. ‘‘எண் திக்கின் கண்ணும்’ என உருபு விரிக்க. ‘‘மலர்ந்து’’, ‘‘மொட்டிக்கும்’’ எனச் சினை வினை முதல் மேல் நின்றன. இவ்வாறன்றி, ‘‘தொண்டர்’’ என்றதில் ஆறாவது விரித்து, ‘‘மலர்ந்து’’ என்பது, ‘மலர’ என்பதன் திரிபு என்றலும் ஆம். என்னோ-காரணம் யாதோ. ‘முன்னைத் தவத்தின் பயனாகக் கிடைத்த அன்பே காரணம்’ என்பதாம். கொல், அசைநிலை. |