3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
14. திருப்பூவணம்
| 147. 
 | கண்ணியல்      மணியின் சூழல்புக் கங்கே கலந்துபுக் கொடுங்கினேற் கங்ஙன்
 நுண்ணியை யெனினும், நம்ப ! நின் பெருமை
 நுண்ணிமை யிறந்தமை அறிவன்
 மண்ணியல் மரபின் தங்கிருள் மொழுப்பின்
 வண்டினம் பாடநின் றாடும்
 புண்ணிய மகளிர் ஆவண வீதிப்
 பூவணம் கோயில்கொண் டாயே.                   (4)
 
 | 
| 
 147.          கண்   இயல் மணியின் சூழல்,      கண்மணி இருக்கும் இடம்.அவ்விடத்தில்        நீ   புகுதலால்   அங்குத்தானே       உன்னைக்  கலந்து,
 உன்னுள்  ஒடுங்கின       எனக்கு’  என்க.  இஃது இறைவனைக் கண்ணாற்
 கண்டமையால்          அவனுடன்                கலந்தமை          கூறியவாறு.
 இக்கருத்துப்பற்றியே,        கண்மணியே   தாம்         இறைவனோடு  கலந்த
 இடமாகக்  கூறினார்.  ‘‘சூழல்  புக்கு’’       என்றதில், ’புகுதலால்’ என்பது,
 ‘புக்கு’       எனத்திரிந்து நின்றது. ‘‘நுண்ணியை’’ என்பது, ‘சிறியை’       எனப்
 பொருள்  தந்தது.  ‘‘அங்ஙன்  நுண்ணியை’’       என்றது, ‘என் கண்மணி
 யளவாய்  நிற்கும்       சிறுமை  யுடையை’      என்றதாம்.நுண்ணிமை- நுட்பம்
 அஃது        இங்கு,   வியாபகத்தைக்        குறித்தது.  இறந்தமை-      கடந்தமை.
 ‘வியாபகப்  பொருள்      பலவற்றையும் கடந்து வியாபகமாய்  நிற்பது நின்
 பெருமை’           என்றதாம்.    மண்    இயல்          மரபின் -   ஒளி
 இல்லாத        இடத்தில்            இருள்          நிறைந்திருப்பது’
 என்ற        மண்ணுலக   முறைப்படி. இந்நிலை தேவருலகில் இன்மையால்,
 ‘‘மண்ணியல்   மரபின்’’       என்றார்.  மொழுப்பு-உயர்ந்து  தோன்றுதல்.
 அஃது    அதனையுடைய    சோலையைக்    குறித்தது.   புண்ணிய
 மகளிர்-செல்வ    மகளிர்.         ‘தேவ   மகளிர்’   என்றும்   உரைப்ப.
 ‘மகளிரையுடைய வீதி’      என்க.
 |