8. புருடோத்தம நம்பி திருவிசைப்பா
27. கோயில்
273. | ஏயிவரே வானவர்க்கும் வானவரே என்பாரால் ; தாயிவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால்: தேய்மதியஞ் சூடிய தில்லைச்சிற்றம்பலவர் வாயின கேட்டறிவார் வையகத்தா ராவாரே. (6) |
273. ’ஏ’ என்றது, இகழ்ச்சி குறித்தது. ‘‘தேய்மதியஞ்சூடிய’’ என்பதும் அன்னது. ‘‘இவர்’’ என்றது. சிற்றம்பலவர் சொல்லைத் தலைவி தன்கூற்றிற் கூறியது. வானவர்க்கும் வானவர்-தேவர்க்கும் தேவர். ஏகாரம், தேற்றம். ‘‘தில்லைச் சிற்றம்பலவர்’’ எனப் பின்னர் வருகின்றமையின், வாளா, ‘‘என்பர்’’ என்றாள். வாயின-வாயினின்றும் வரும் சொற்கள். ‘சொல் என்னாது வாயின என்றாள், ‘மெய்யல்லது கூறாதவாய்’ என அதனது சிறப்புக் கூறுவாள் போன்று பொய்கூறும் வாயாதலை உணர்த்தற்கு. ‘ஒருத்திக்கு நலம் செய்யாத இவர் அனைத்துயிர்க்கும் நலம் செய்வாராகத் தம்மைக் கூறிக்கொள்ளுதல் எங்ஙனம் பொருந்தும்’ என்பது கருத்து. ‘‘ஆவாரே’’ என்றதில் உள்ள ஏகாரம், எதிர்மறைப்பொருட்டாய் நின்றது. ‘வையகத்தார் ஆகார்’ என்றது, ‘வானகத்தார் ஆவர்’ என்னும் பொருட்டாய், ‘இவர் வாய்மொழியைத் தெளிந்தோர்க்கு உளதாவது இறந்துபாடேயாம்’ என்னும் குறிப்பினைத் தந்து நின்றது. |