3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
101. | தளிரொளி மணிப்பூம் பதம்சிலம் பலம்பச் சடைவிரித் தலையெறி கங்கைத் தெளிரொளி மணிநீர்த் திவலைமுத் தரும்பித் திருமுகம் மலர்ந்துசொட் டட்டக் கிளரொளி மணிவண் டறைபொழிற் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் வளரொளி மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தன்என் மனங்கலந் தானே. (1) |
101. தளிர் ஒளி-தளிர்போன்ற ஒளியையுடைய. மணிப்பூம் பதம்-அழகிய மலர்போலும் திருவடியில். அலம்ப-ஒலிக்க. தெளிர் ஒளி மணி நீர்த்திவலை-தெளிவான ஒளியை யுடைய அழகிய நீர்த் துளிகள். முத்து அரும்பி-முத்துப்போலத் தோன்ற. அரும்ப என்பது ‘‘அரும்பி’’ எனத் திரிந்தது. சொட்டு அட்ட-துளிகளைச் சிந்த, துளி, வியர்வைத் துளி. ‘சொட்டட்ட ஆடும் ’ என இயையும். பழனம்-வயல், ‘பொழிலும் பழனமும் கம்பலை செய்யும் கீழ்க்கோட்டூர்’ என்க. கெழுவு-பொருந்திய. கம்பலை-ஆரவாரம். ‘கம்பலம்’ என்பது பாடம் அன்று. பொழிலிலும், பழனத்திலும் உள்ளவை செய்கின்ற ஆரவாரத்தை அவையே செய்வனவாக்க கூறினார். மணிஅம்பலம்-மாணிக்கச் சபை. மைந்தன்-வலிமை (தளராமை) உடையவன் ஈற்றில், ‘இஃதென்ன வியப்பு’ என்னும் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. |