சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்


102.


 

துண்டவெண் பிறையும் படர்சடை மொழுப்பும்
   சுழியமும் சூலமும் நீல
கண்டமும் குழையும் பவளவாய் இதழும்
   கண்ணுதல் திலகமும் காட்டிக்

கெண்டையும் கயலும் உகளும்நீர்ப் பழனங்
   கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர்
வண்டறை மணியம் பலத்துள் நின்றாடும்
   மைந்தன்என் மனங்கலந் தானே.               (2)
 

102.  மொழுப்பு  -  முடி.  ‘சூழியம்’  என்பது  குறுகி. ‘‘சுழியம்’’
என   வந்தது.    சூழியம்  -   உச்சிக்    கொண்டை,     இஃது,

இங்குச்     சடைமுடியைச் சுற்றியுள்ள பாம்பைக் குறித்தது.    ‘பவள
இதழ்’  என  இயையும். ‘கண்ணையுடைய நெற்றியிலே உள்ள திலகம்’
என்க.  ‘காட்டிக்  கலந்தான்’  என  முடியும்.  ‘கெண்டை, கயல்’-மீன்
வகைகள். உகளும்-துள்ளுகின்ற.  


மேல்