சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13. கங்கைகொண்ட சோளேச்சரம்


135.

அற்புதத் தெய்வம் இதனின்மற் றுண்டே ?
   அன்பொடு தன்னை அஞ் செழுத்தின்
சொற்பதத் துள்வைத் துள்ளம்அள் ளூறும்
   தொண்டருக் கெண்டிசைக் கனகம்
பற்பதக் குவையும், பைம்பொன்மா ளிகையும்,
   பவளவா யவர்பணை முலையும்,
கற்பகப் பொழிலும் முழுதுமாங் கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே .                (3)
 

135. ‘‘அற்புதத்     தெய்வம்  இதனின்மற்  றுண்டே’’ என்பதனை
இறுதிக்கண்   வைத்து   உரைக்க.  ‘‘அஞ்செழுத்தின்’’  என்ற  இன்,
தவிர்வழி  வந்த  சாரியை.  சொல்  பதம்  -சொல்லாகிய நிலை. அள்
ஊறும்-மிக  உருகுகின்ற  ;  என்றதனை, ‘உருகி நினைக்கின்ற’ என்க.
‘எண்திசைக்  கண்ணும்  ஆம்’  என  இயைக்க,  ‘‘கனகம்’’  என்பது,
பற்பதக்  குவை’’  என்பதில்  தொக்கு நின்ற’ ‘போலும்’ என்பதனோடு
முடியும்.  ‘பர்வதம்’ என்னும்  ஆரியச் சொல் ‘‘பற்பதம்’’ என வந்தது.
இதற்குப்  பிறவாறு  உரைப்பாரும்  உளர். ‘‘பொழிலும்’’ என்பதன்பின்,
‘ஆகிய’  என்பது  எஞ்சி  நின்றது. ‘‘ஆம்’’ என்றது, ‘ஆவான்’ என்ற
முற்று.   ‘ஆவான்’   என்றது,   ‘அவை   அனைத்தினாலும்  வரும்
இன்பத்தைத்   தான்   ஒருவனே  தருவான்’  என்றதாம்.  ‘அதனால்,
அற்புதத்  தெய்வம்  இதனின்  மற்று  உண்டோ’   என்க.  இதனின்-
இதுபோல்,  ‘‘உண்டே’‘  என்ற வினா, இல்லாமையை விளக்கி நின்றது.
கங்கைகொண்ட  சோளேச்சரத்தானைத்  தெய்வங்களோடு  பொருவிக்
கூறலின்,   ‘‘இதனின்’’   என்றார்.   இதற்குப்  பிறவாறு  உரைத்தல்
பொருந்தாமை அறிக.


மேல்