சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

13. கங்கைகொண்ட சோளேச்சரம்


137.

சுருதிவா னவனாம் ! திருநெடு மாலாம் !
   சுந்தர விசும்பின் இந்திரனாம் !
பருதிவா னவனாம் ! படர்சடை முக்கட்
   பகவனாம் அகஉயிர்க் கமுதாம் !

எருதுவா கனனாம் எயில்கள்மூன் றெரித்த
   ஏறுசே வகனுமாம் ! பின்னும்
கருதுவார் கருதும் உருவமாம் ! கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானே.                 (5)
 

137. ‘‘கங்கைகொண்ட     சோளேச்சரத்தானே’’        என்பதை
முதலிற்கொள்க. ஏகாரம். தேற்றம். அவன் ஒருவனே பல உருவுமாவன்
என்க.  சுருதி  வானவன்-வேதத்தை  ஓதுகின்ற  தேவன்  ;  பிரமன்.
‘விசும்பு’’     என்றது     சுவர்க்கலோகத்தை    ;   ‘‘அகல்விசும்பு
ளார்கோமான்-இந்திரனே’’    (குறள்-25)   என்றது   காண்க.  பரிதி
வானவன்-சூரிய    தேவன்.    படர்    சடை   முக்கண்   பகவன்,
உருத்திரன்-என்றது  சீகண்டரை. அக உயிர்-தன்னை அடைந்த உயிர்
;  அவைகட்கு அமுதம்போல அழியா இன்பந்தருவன் என்க. இதனை
இறுதியிற்    கூட்டி    உரைக்க.   எருது   வாகனன் -  இடபாரூட 
மூர்த்தி.      எயில்கள்         மூன்று     எரித்த      சேவகன்,  
திரிபுராந்தக    மூர்த்தி.     இவையும்       சீகண்டர்    கொண்ட
வடிவங்கள்.    ‘அவரவரும் அன்பினாற்கொண்ட மூர்த்திகள்  பலரும்
தானாய்  இருந்து  அவரவர்  கருதிய பயனைத் தருபவன்  பரமசிவன்
ஒருவனே’ என்றவாறு. தனது உண்மை நிலையை உணரும் ஞானியரை,
‘‘அகவுயிர்’’  என்றும்,  அவர்க்குப்  பரமுத்தி யளித்தலை ‘‘அமுதாம்’’
என்றும்  குறித்தனர்  என்க.  ‘‘ஆருருவ  உள்குவார் உள்ளத்துள்ளே
அவ்வுருவாய்  நிற்கின்ற  அருளும்  தோன்றும்’’  (திருமுறை-6-18,11.)
என்று திருநாவுக்கரசர் அருளிச்செய்தமை காண்க. ஏறு சேவகன்-மிக்க
வீரத்தையுடையவன்.


மேல்