சொல்லகராதிச் சுருக்கம்

3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா

17. திருவிடைமருதூர்


174.


   

இந்திர லோக முழுவதும் பணிகேட்
   டிணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாக மேகலை யரையா
   அகந்தொறும் பலிதிரி யடிகள் 
தந்திரி வீணை கீதமுன் பாடச்
   சாதிகின் னரங்கலந் தொலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
   மருவிடந் திருவிடை மருதே.                   (2)
 

174. ‘தம்மை    விண்ணுலகம்    முழுவதும்  வணங்கி    நிற்கத் 
தாம்போய் அகந்தொறும்   பிச்சைக்கு   உழல்கின்றார்’   என்பதாம். 
‘‘அடிகள்’’   என்ற உயர்வுச் சொல்லும் இங்கு    நகைப்பொருட்டாயே
நின்றது.  தந்திரி    வீணை- நரம்புகளையுடைய வீணை. சாதி-உயர்ந்த,
கின்னரம்-யாழ்  ; என்றது அதன்   இசையை. வீணை முற்பட்டுப் பாட.
யாழிசை  அதனோடு  ஒன்றி ஒலிக்கின்றது’  என்பதாம். ‘கீதமும் பாட’
என்பது    பாடம்    அன்று.    ‘‘வீணை    பாட’’   என,   கருவி
வினைமுதல்போலக் கூறப்பட்டது.


மேல்